ஆக்ஸ்போர்டின் கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனெகாவுடன் கூட்டு சேர்ந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), சாத்தியமான தடுப்பூசியின் கட்டம் 2/3 மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம் (டி.சி.ஜி.ஐ) அனுமதி கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோவிட் ஷீல்ட்' சோதனைகளை நடத்துவதற்கு அனுமதி கோரி புனேவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தனது விண்ணப்பத்தை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககத்திடம் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்ததாக தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் ஐந்து சோதனை தளங்களில் நடத்தப்பட்ட தடுப்பூசியின் முதல் இரண்டு கட்ட சோதனைகளின் ஆரம்ப முடிவுகள் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பதை காட்டியது. மேலும், உடலில் ஆன்டிபாடிகளை அதிகரிக்க செய்வதாக தெரியவந்துள்ளது.
தடுப்பூசியை அறிமுகப்படுத்த, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான எஸ்ஐஐ, ஜென்னர் நிறுவனம் (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்) உருவாக்கிய சாத்தியமான தடுப்பூசியை பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
"ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு வரும் கோவிட் -19 தடுப்பூசியின் 10 கோடி அளவை உற்பத்தி செய்வதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அஸ்ட்ராஜெனெகாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது" என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அலுவலர் ஆதார் பூனவல்லா கூறியுள்ளார். இந்த தடுப்பூசிகள் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று கூறினார்.