புதுவை மாநில வளர்ச்சி, நிவாரண மறுவாழ்வு ஆணையர் அன்பரசு நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”கரோனா தொற்றைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கடந்த சில வாரங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
தற்போது அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக தேசிய சராசரியைவிட தொற்று பரவும் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இறப்பு சதவீதமும் படிப்படியாக குறைந்து வருகிறது” என்றார்.
மேலும், புதுவையில் தற்போது ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகளும், பரிசோதனை மையங்களும் உருவாக்கியுள்ளோம். மூன்று கல்லூரிகளில் பரிசோதனையில் தொடங்கியுள்ளது எஞ்சிய நான்கு கல்லூரிகளிலும் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதிக்கு காத்திருக்கிறது.
தொடர்ந்து பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரித்துவருகிறோம். கரோனா நோயாளிகள் மிதமானவர்கள், நடுத்தரம் , அதிகப்படி என மூன்று நிலைகளில் உள்ளனர். இதில் நடுத்தரம், அதிகப்படியான தொற்று உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
மிதமானவர்கள் மருத்துவமனை ஆலோசனையுடன் வீடுகளில் சிகிச்சை பெறலாம். தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரத்து 156 படுக்கை வசதிகள் செய்துள்ளோம் என்றார்.
அரசின் பிற துறை ஊழியர்களையும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். கரோனா குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம், அச்சம் அடைய வேண்டாம் கரோனா வராமல் தடுக்க அனைத்து முயற்சிகளும் அரசு எடுத்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளையும் செய்து உள்ளோம் என்றும் அவர் கூறினார்.