கேரள தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. எதிர்ப்பாராத வகையில் ஏற்பட்ட தீவிபத்தானது, தூதரக பொதிகளின் வழியே நடந்த தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்கள் சேமித்துவைக்கப்பட்டிருந்த அறையையும் நாசம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, கேரள தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ, தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழிப்பதற்கான சதி வேலை நடந்திருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
உலகம் முழுவதும் பரபரப்பை தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பான தொடர்பான முக்கிய ஆதாரங்களை அழிப்பதற்கான சதியே இந்த கேரள தலைமைச் செயலகத் தீவிபத்து என்று எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதலா, கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் நேற்று கேரள மாநில ஆளுநர் சந்தித்த சென்னிதலா இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கடிதம் ஒன்றை அளித்தார்.
அதில்,"கேரள தலைமைச் செயலகத்தின் பொது நிர்வாகத் துறையில் தீ விபத்து ஏற்பட்ட துறையின் கீழ்தான், வெளிநாட்டுப் பயணம் மற்றும் அரசியல் ஒப்புதல்கள் தொடர்பான கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும். அனைத்து சிசிடிவி காட்சிகளையும் என்.ஐ.ஏ. கோரியிருப்பதை யாரும் மறக்கக் கூடாது. முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தெரிந்தே அனைத்து ஆதாரங்களையும் அழிப்பதற்கான இந்த சதி அரங்கேற்றப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள எதிர்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதாலா அளித்த கடிதத்தை முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுப்பி, அது குறித்து விளக்கமளிக்க கோரியுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
தீ விபத்து குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடகங்களைச் சந்தித்து பேசிய பொது நிர்வாகத் துறையின் கூடுதல் செயலர் பி. ஹனி," குறிப்பிட்ட அந்த துறையில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், விபத்து ஏற்பட்ட அன்று வெறும் 2 பேர் மட்டுமே அங்கு பணியில் இருந்தனர். கணிணியில் தீ ஏற்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்தம்தான் தீ ஏற்பட்டதற்குக் காரணம். கணிணிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த சில பழைய கோப்புகள் நாசமடைந்தன. விருந்தினர் மாளிகையில் அறை பதிவு செய்வது தொடர்பான கோப்புகள்தான் சேதமடைந்துள்ளன. ஆனால், எந்தவொரு முக்கியக் கோப்புகளும் அழிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், "மின் அழுத்தம் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதில் எந்த சதியும் இல்லை. செயலகத்தில் இது போல பலமுறை தீவிபத்துகள் நடந்துள்ளன. அரசியல் காரணங்களுக்காக காங்கிரசும் பாஜகவும் இணைந்துக் கொண்டு இத்தகைய பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவது வெட்கக்கேடானதாகும்" என கூறினார்.