புதுச்சேரியில் கடந்த 8 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் திறக்கப்பட்டது.
10, 12ஆம் வகுப்புகளுக்கு 3 நாள்களும், 9 முதல் 11ஆம் வகுப்புகளுக்கு 3 நாள்களும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் ஜீவானந்தம் அரசு பள்ளியில் மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதால் வகுப்பு மூடப்பட்டன. அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையே, இன்று புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியை ஒருவருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், கிராம பகுதியான வாதானூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு இன்று கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யபட்டு இரு பள்ளிகள் மூடப்பட்டன.
இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பீதியில் உள்ளனர்.