கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு அரசுத் துறைகள் தங்கள் பணியினை தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொண்டன. அந்தவகையில், நீதிமன்றங்களின் பணியும் மாற்றமடைந்தன. உச்ச நீதிமன்றத்தை மூடி, வாயில்கள் அனைத்தும் சீல்வைக்கப்பட்டன. மிகவும் அவசரமான வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்தார்.
நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூா்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வும், நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், அனிருத்தா போஸ் ஆகியோா் கொண்ட மற்றொரு அமர்வும், நீதிபதி அருண் மிஷ்ரா, தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வும் அவசர வழக்குகளை விசாரிப்பர்.
விசாரணை விவரம்:
நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் அமர்வு: 11 மணி
நீதிபதி எல். நாகேஸ்வர ராவின் அமர்வு: 1 மணி
நீதிபதி அருண் மிஷ்ராவின் அமர்வு: 3 மணி
அனைத்துவிதமான வழக்குகளுக்கும் உள்ள கால அவகாசத்தை, காலவரையறையின்றி உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் தாக்கல்செய்யப்பட முடியாத எந்தவொரு மனுக்களையும் பின்னர் தாக்கல்செய்துகொள்ளலாம். உரிய நேரத்தில் தாக்கல்செய்யப்பட முடியவில்லை என்பதற்காக, எந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் போகாது என்று தனக்குள்ள பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அனைத்து உயர் நீதிமன்றங்களும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள்பட்ட நீதிமன்றங்களுக்கும், தீர்ப்பாயங்களுக்கும் இந்த உத்தரவை விரிவுபடுத்திவருகின்றன.
சாதாரண வழக்குகளின் விசாரணைகள் அனைத்தும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மிகவும் அவசரமான வழக்கென்றால், நீதிமன்றப் பதிவாளருக்கு அவரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் பதிவுசெய்யப்பட வேண்டும். பின்னர், தலைமை நீதிபதியின் அனுமதியைப் பெற்று, காணொலி மூலம் வழக்கின் விசாரணை நடைபெறும்.
இதையும் படிங்க: சார் நான் டாக்டர்... விசாரிக்காமல் தாக்கிய காவலர்: வைரலாகும் வீடியோ