2012ஆம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ மாணவியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்த வழக்கில் வினய் சர்மா, அக்சய் தாக்கூர், பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான மரண தண்டனை பிப்ரவரி 1ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் பின் ஒருவராக மேல்முறையீடு, கருணை மனுக்களைத் தாக்கல் செய்ததால் தண்டையை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது.
இதனிடையே, நிர்பயா குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தண்டனையை நிறைவேற்றக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் மனு தாக்கல் செய்திருந்தது. இது பிப்ரவரி 5ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், நீதிபதி நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வாதங்களைக் கேட்டபிறகு, மனு மீதான விசாரணையை மார்ச் 5ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்துவைத்தது.
இதனிடையே, குற்றவாளிகளுள் ஒருவரான வினய் சர்மா தனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கக் கோரிய மனுவை டெல்லி நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை நிராகரித்தது.
நிர்பயா வழக்கின் குற்றிவாளிகளுக்கு வரும் மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான வாரண்ட்டை டெல்லி நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி வழங்கியது.
இதையும் படிங்க : கொரோனா பீதி: நாளை சீனா செல்லும் இந்திய மீட்பு விமானம்