கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவகாரம் நீர்பூத்த நெருப்பாக உள்ளது. இந்த நிலையில் மாநில முதலமைச்சர் எடியூரப்பாவின் குரல் பதிவு ஒன்று விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
எடியூரப்பாவின் குரலை போன்றுள்ள அந்தப் பதிவில், “காங்கிரஸ்- மதசார்பற்ற கூட்டணி ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 17 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாரதிய ஜனதாவின் மேற்பார்வையில் மும்பையில் இருந்தனர்.
கர்நாடகத்தில் பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்க, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் தியாகமும் காரணம். இதனை பாரதிய ஜனதாவினர் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் புதிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில், ”17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையின் போது, எடியூரப்பாவின் இந்த குரல் பதிவு (ஆடியோ) குறித்து விசாரிக்க வேண்டும். இதற்காக சிறப்பு அமர்வை நியமிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்மந்தப்பட்ட அந்த குரல் பதிவுகள் குறித்து ஆலோசிப்பதாக கருத்து தெரிவித்துள்ளது. 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வருகிற 25ஆம் தேதி தீர்ப்பு வெளியாகிறது. இந்த நிலையில் எடியூரப்பாவின் குரல் பதிவு விவகாரம் அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடிய சிவசேனா!