முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரின் பாதுகாவலர்களால் 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற பாதுகாவலர்கள் சீக்கியர்கள் என்பதால், டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் அவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, பல சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கமல்நாத், சஜ்ஜன் குமார் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நானாவதி கமிஷன், கமல்நாத்தை குற்றவாளி என அறிவித்தது. பின்னர், அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அது திரும்பபெறப்பட்டது. ஆனால், சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்த டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
சீக்கியர்கள் படுகொலை தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, சீக்கியர்கள் படுகொலை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி திங்ரா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு சீக்கியர்கள் படுகொலை குறித்து விசாரித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவிடம் தனது அறிக்கையை சமர்பித்தது. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி திங்ராவின் அறிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா தாக்கரே அரசு?