கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கத்தை காரணம் காட்டி, வங்கிக் கடனுக்கான வட்டித் தொகையை தள்ளுபடி செய்யக் கோரி பல்வேறு துறைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு மேற்கொண்டது.
இந்த வழக்கில் ரிசர்வ் வங்கி சார்பில் வாதத்தை முன்வைத்த மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, ”கடன் தொகை செலுத்த ஆறு மாத கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. கரோனா காலத்தில் நிறுவனங்களில் ஏற்பட்ட தாக்கத்தைப் போலவே வங்கித்துறையும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் வங்கித்துறையின் நிதிசுமையை கருத்தில் கொண்டு வட்டித் தள்ளுபடி என்ற நடவடிக்கை சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் கடன் தவணைக்கான சலுகைக் காலம் நிறைவடைவதால், தவணைக்காலம் தாண்டி 90 நாட்கள் கடன் செலுத்தாத கணக்குகள் வாராக்கடன் கணக்குகளாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தது” என்றார்.
இந்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, தற்போதைய பொருளாதார சூழலைக் காரணம் காட்டி ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பின்னர் அடுத்த இரு மாதங்களுக்கு புதிய வாராக்கடன் கணக்குகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டார். மேலும், அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: இந்திய - சீன பதற்றம்: லடாக்கிற்குச் செல்லும் ராணுவத் தலைமைத் தளபதி