உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருக்கிறார். அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் ஆவார். தலைமை நீதிபதி மீதே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ரஞ்சன் கோகாய், ”பதவிக்காலம் முடியும்வரை பயமின்றி பணியாற்றுவேன். அடுத்த வாரத்தில் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். எனவே அதனை தடுக்கும் விதமாக என்னை அச்சுறுத்துவதற்காகத்தான் இந்தப் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகப் பார்க்கிறேன்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், பாலியல் புகாரில் ரஞ்சன் கோகாயை சிக்க வைப்பதற்கு சதி நடக்கிறது என வழக்கறிஞர் பெய்ன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக பிற்பகல் இரண்டு மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றனர்.
மேலும், "நீதித் துறையை பின்னால் இருந்து இயக்குவோரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இல்லையேல் நீதித் துறையின் தனித்தன்மைக்கு ஆபத்து நேரிடும். நீதித் துறையை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள்” என எச்சரித்தனர்.