சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வித்தியாசமான முறையில் உடை, சிகை அலங்காரத்துடன் கலந்துகொண்டார். அவரின் அந்தத் தோற்றத்தை பலரும் பலவிதமாக இணையத்தில் கலாய்த்துவந்தனர்.
இந்தப் பிரச்னை மறைவதற்குள் பாஜகவின் இளைஞரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரியங்காவின் இந்தப் படத்தோடு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் படத்தை மார்பிங் செய்து முகநூல் சமூக வலைதளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பதிவிட்டார்.
இதைக்கண்ட திருணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் பாஜக நிர்வாகியான பிரியங்கா சர்மாவின் பதிவிற்கு கண்டனம் தெரிவித்துவந்தனர். ஆனால் பாஜக நிர்வாகிகள் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று அந்த பெண்ணிற்கு ஆதரவு அளித்தனர்.
பின்னர் அப்பெண் மேற்கு வங்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தொடர்ந்தார். இந்நிலையில், அந்த மனுவின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அந்த பெண் நிர்வாகிக்கு ஜாமின் வழங்க தயார் என்றும், ஆனால் அப்பெண் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். ஆனால் அந்தப் பெண் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான ஒன்று என்றும், தான் அவரிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்துகிறேன் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, தனது தவறுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிரியங்கா சர்மாவிற்கு நீதிபதிகள் பிணை வழங்கினர்.