அண்மையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, வீடு, வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பாகப் பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. அதில், "கரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் முடங்கியுள்ள நிலையில் வருவாய்க்கு வழியின்றி மக்கள் தவித்துவருகின்றனர்.
இத்தகையச் சூழலில், வங்கிக் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி தற்காலிகமாக விலக்கிக்கொள்ளாமல் கடன் தவணைக்கான காலக்கெடுவை மட்டுமே நீட்டித்துள்ளது.
இது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது. எனவே, கரோனா காலத்தில் கடன் வட்டி வசூல் செய்யக் கூடாது" என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இது குறித்து உரிய விளக்கத்தை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு எதிரொலி : 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பெங்களூரு நிறுவனம்