டெல்லி: 1984ஆம் ஆண்டு சீக்கிய கலவர வழக்கில் குற்றவாளியும், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினருமான சஜ்ஜன் குமார் தாக்கல் செய்த பிணை (ஜாமின்) மனு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் அவருக்கு பிணை வழங்குவது தொடர்பாக கேள்வியெழுப்பி உள்ளது. சஜ்ஜன் குமார் இதற்கு முன்பு பலமுறை பிணை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனாலும், அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கவில்லை. அவர் தனது வயது மூப்பு மற்றும் சிறைக்குள் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தின் அடிப்படையில் தற்போது பிணை கோரியுள்ளார்.
இந்த வழக்கு முன்னதாக, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சஜ்ஜன் குமாரின் வயது மூப்பு காரணியைக் கருத்தில் கொண்டு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டனர்.
1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது இரு சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் கலவரம் வெடித்தது நினைவுகூரத்தக்கது.