இந்திய வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விஜய் மல்லையாவை, கடந்த 2017ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தலைமறைவு குற்றவாளி என அறிவித்தது. தற்போது இங்கிலாந்தில் உள்ள இவரை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் அந்நாட்டு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் தன்னுடைய வாரிசுகளான சித்தார்த், தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவர் மாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மல்லையா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மல்லையாவின் மறுசீராய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் யு.யூ. லலித், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.
இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மும்பை சிறப்பு நீதிமன்றம், விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆகஸ்ட் 20இல் விஜய் மல்லையாவின் மறுசீராய்வு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!