கோவிட்-19 தொற்றின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வைரஸ் பாதிப்பு குறையவில்லை.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா பரவலுக்குச் சீனா தான் காரணம் என்றும்; இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் சீனாவிடமிருந்து 600 பில்லியன் டாலர்களை இழப்பீடாக பெறுவது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அணுக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், "வூஹான் கிருமியியல் ஆய்வகத்திலிருந்து தான் கோவிட்-19 பரவியது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. இதனால் நிறைய இந்தியர்கள், தங்கள் உயிரை இழந்துள்ளனர். இது இந்தியப் பொருளாதாரத்தையும் ஒட்டுமொத்தமாக சீரழித்துள்ளது.
1984ஆம் ஆண்டு நடைபெற்ற உயிரியல் ஆயுத மாநாட்டிலும் சீனா, உயிரியல் ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று ஒப்புக் கொண்டது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அமர்வின் முன்பு இன்று (ஜூன் 18) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயா சுகின், சாதாரண குடிமகன் சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியாது என்ற காரணத்தினால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பான வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். மேலும், இது குறித்து மத்திய அரசு, சட்ட அமைச்சகம், சுகாதார அமைச்சகம் ஆகியவற்றை நாடவும் மனுதாரருக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன, ஆனால் பயன்படுத்தவில்லை - வெளியுறவுத் துறை அமைச்சர்