பேச்சு சுதந்திரம், சமத்துவ உரிமை ஆகியவற்றை மீறும் வகையில் இந்திய அரசியலமைப்பில் உள்ள ‘நீதிமன்ற அவதூறு’ பிரிவின்படி அவமதிப்பைக் கையாளும் குற்றவியல் சட்ட விதிகளை நீக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி, மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திலேயே தொடுக்கலாம் என மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவானுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக காணொலி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜீவ் தவான், "இது போன்ற பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மனுதாரர்கள் தங்களது மனுவை திரும்பப்பெற விரும்புகிறார்கள்" என கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தைத் தவிர்த்து பொருத்தமான வேறு நீதி மன்றத்தை அணுக மனுதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கி, இந்த மனுவை திரும்பப்பெற அனுமதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.