சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று ரியாத்தில் சந்தித்து பேசினார். இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை சவுதி அரேபியா புரிந்து கொண்டுள்ளதாக அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக சவுதி அரேபியா முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை சவுதி அரேபியா முதலீடு செய்யவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா கொண்டுவந்ததன் மூலம் அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்துகளை மத்திய அரசு நீக்கியது. இதனால், மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்தது.