இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதனிடையே தலைநகர் டெல்லியில் மே 12ஆம் தேதி ஆறாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
அதற்காக டெல்லியில் வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கியது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் சன்ஜி விரஷத் கட்சி சார்பாக போட்டியிடும் அமித் சர்மா என்பவர் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் தான் வெற்றிபெற்றால் பாதிவிலைக்கு மதுவும், ரமலான் பண்டிகையின்போது இஸ்லாமிய குடும்பங்களுக்கு ஆடும் இலவசமாக அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும் அவரது வாக்குறுதிகள் பின்வருமாறு,
- அனைவருக்கும் பி.ஹெச்.டி. வரை இலவசக் கல்வி அளிக்கப்படும்
- பெண்களுக்கு இலவசமாக தங்கம் வழங்கப்படும்
- பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்
- பெண்களின் திருமணத்திற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்படும்
- வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
- தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் இலவசமாக அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதனிடையே அமித் சர்மாவின் இந்தத் தேர்தல் வாக்குறுதி வியப்பை ஏற்படுத்தினாலும், இதெல்லாம் சாத்தியமாகுமா என்ற கேள்வியே அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.