மும்பை மாநகரில் கடந்த திங்கள்கிழமை (அக்.12) வழக்கமான மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக பெருநகர மும்பைக்கு உள்பட்ட தானே, ராய்காட், பால்கர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
இந்த மின்தடை காரணமாக பெருநகர மும்பையில் வசிக்கும் 65 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்தனர். கரோனா காரணமாக பலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த மெகா மின்வெட்டு, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மாநகரில் கடந்த இரண்டு நாள்களாக நிலவும் மின்தடையால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மின்துறை துறை அமைச்சர் நிதின் ரவுத், "மும்பையிலுள்ள சர்க்யூட் 1இல் சில வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.
எனவே முழு மின் சுமையும் சர்க்யூட் 2க்கு மாற்றப்பட்டது. ஆனால், அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. ஆனால், இது நடைபெற்றிருக்கக் கூடாது.
இந்த மும்பை மெகா மின்வெட்டு என்பது நாசவேலையாக இருக்கலாம் என்றும் நாங்கள் சந்தேகிக்கிறோம். இது குறித்து முறையான விசாரணை நடத்த மத்திய அரசின் தொழில்நுட்பக் குழு ஒன்று இங்கு வந்துள்ளது. இந்தக் குழு ஒரு வாரத்தில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும். நாங்களும் மாநில அளவில் விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவுள்ளோம்.
2011ஆம் ஆண்டு இதேபோல ஒரு சம்பவம் நடைபெற்றபோது அமைக்கப்பட்ட விசாரணைக் குழு சமர்ப்பித்த ஆய்வு அறிக்கை குறித்தும் விசாரிக்கவுள்ளோம்" என்றார்.
மும்பையில் நேற்று முன் தினம் மிகப் பெரிய மின்தடை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அத்தியாவசிய சேவைகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கவே இரண்டு மணிநேரம் ஆனது. தொடர்ந்து மற்ற இடங்களுக்கு படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்