கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நேற்று மாலை 6 மணி முதல் நாடு முழுவதும் 21 நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திரமோடி பிறப்பித்துள்ளார். அதன்படி, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை இந்த முழு ஊரடங்கு உத்தரவு தொடரும். அத்தியாவசியப் பொருள்களைத் தவிர மற்ற எந்தவிதமான தேவைக்காகவும் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் எதிரொலியாக, மார்ச் 29ஆம் தேதி நடக்கவிருந்த சபரிமலை கோயில் திருவிழா ரத்துசெய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக, கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில் திருவிழாக்களையும் ரத்துசெய்வதாக, திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் பெருந்தொற்றால், இதுவரை 536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இந்தக் கொடிய வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா காரணமாக ஒருவர் சிகிச்சை, 78 பேர் தனிமைப்படுத்தல் - சுகாதாரத்துறை