சபரிமலை கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு ஆலய நுழைவுக்கு அனுமதியில்லை. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதியளித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்தது.
இந்த விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. அப்போது, சபரிமலை தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது சரிதான் என்று ஆணையிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, பெண்களுக்கெதிரான அனைத்து மத பாகுபாடுகளையும் இந்த அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று தீர்ப்பளித்தார்.
இதனால் பெண்களுக்கெதிரான பாகுபாடு வழக்குகள் நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் தினந்தோறும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சபரிமலை கோயில் விவகாரத்தோடு, இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு, வேறு சமூக ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் பார்சி பெண்களுக்கு வழிபாடு, சொத்து உள்ளிட்ட உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தண்ணீர் பெறுவதில் பாகுபாடு கூடாது - ஏ.ஆர். ரகுமான்