ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர், "'மேக் இன் இந்தியா' குறித்து நரேந்திர மோடி பேசிவருகிறார். ஆனால் எங்குப் பார்த்தாலும், 'ரேப் இன் இந்தியா' நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார். பின்னர், அந்தப் பெண் விபத்தில் சிக்கியுள்ளார். இது குறித்து வாயை கூட திறக்கவில்லை மோடி" என்றார்.
இதனை மக்களவையில் பிரச்னையைாகக் கிளப்பிய பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "வரலாற்றில் முதல்முறையாக, இந்தியப் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்க வேண்டும் என ஒரு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இதைத்தான் மக்களுக்கு ராகுல் காந்தி தெரிவிக்க விரும்புகிறாரா? அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்" எனப் பேசினார்.
ஆனால், தனது கருத்து குறித்து விளக்கமளிக்க ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, "பிரதமரின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை மதிக்கிறோம். பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும்கூட. ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? இதைத்தான் ராகுல் காந்தி சொல்ல நினைத்தார். மேக் இன் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. பாலியல் வன்புணர்வுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். இதுதான் எங்கள் பிரச்னை" என்றார்.
பாஜகவினரின் தொடர் அமளியால், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: எரியும் அஸ்ஸாம்!