மாநிலங்களவைத் துணைத் தலைவருக்கான தேர்தல் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண சிங் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி மட்டுமல்லாது, பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மனோஜ் ஜா களமிறங்கியுள்ளார். எதிர்க்கட்சி வேட்பாளரான மனோஜ் ஜா இன்று (செப் 11) காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
மனோஜ் ஜாவுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தரும் நிலையில், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவையும் பெற எதிர்க்கட்சிகள் முயற்சி செய்துவருகின்றன. இருப்பினும் போதிய எண்ணிக்கை கிடைக்க வாய்ப்பு குறைவு என்பதால் தேசிய ஜனநாயக வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் அதிகரிக்கும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை!