கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று மாநிலங்களவை தலைவர் அறையில் சந்தித்துப் பேசிய இரு அவைத் தலைவர்களும், நாடாளுமன்ற குழுக் கூட்டத்தைக் காணொலி காட்சி மூலம் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும், இதுகுறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரு அவை தலைமைச் செயலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
ஊரடங்கு தொடங்கி, வெங்கையா நாயுடுவும், ஓம் பிர்லாவும் நேரில் சந்தித்துப் பேசுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, மே 7ஆம் தேதி இருவரும் சந்தித்துப் பேசினர்.
இன்றைய சந்திப்பின் போது, நாடாளுமன்ற குழுக் கூட்டத்தைக் காணொலி காட்சி மூலம் நடத்துவதில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள், தொழில் நுட்ப ஏற்பாடுகள் குறித்து இரு அவைகளின் தலைமைச் செயலர்களும் அவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
முன்னதாக, இதுபோன்ற கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியிருந்தார்.
அதேபோன்று, உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் ஆனந்த் ஷர்மாவும், தகவல் தொழில் நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சசி தரூரும் காணொலி மூலம் கூட்டம் நடத்துமாறு ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : ஊரடங்கை தளர்த்தினால் நிலைமை இன்னும் மோசமாகலாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!