2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெல்லியில் உள்ள சாலையில் தீரஞ் குமார் என்பவரும் அவரது தந்தையும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் வைக்கப்பட்டிருந்த சங்கிலித் தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த விபத்தால் தீரஞ் குமாரின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளால் எனது வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தீரஞ் குமார் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி நவீன் சாவ்லா முன்னிலை விசாரணைக்கு வந்தது. அதில் தீரஞ் குமார் தரப்பில், ''சாலையில் வைக்கப்பட்டிருந்த சங்கிலியால் இணைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் ஒளிக்கதிர்கள் போதுமான அளவிற்கு தெரியவில்லை. காவல்துறையினரின் அலட்சியம் எங்களின் விபத்திற்கு காரணம்'' என வாதிடப்பட்டது.
தொடர்ந்து காவல்துறையினர் தரப்பில், ''சம்பவம் நடந்த பகுதியிலிருந்து யாரும் ஆஜராகவில்லை. அதேபோல் அப்பகுதியில் ஹெல்மட் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. அதீத வேகத்தில் வந்ததால் மட்டுமே விபத்து நடந்ததற்கு காரணம்'' எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி நவீன் சாவ்லா அளித்த தீர்ப்பில், ''விபத்து நடந்த இடத்திலிருந்து யாரும் ஆஜராகவில்லை என்பது சர்ச்சைக்குரிய விஷயமல்ல. அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் இழப்பீடு கேட்க உரிமையுள்ளது. மனுதாரர் கேட்டிருக்கும் ரூ.75 லட்சம் இழப்பீடு நியாயமானதாக இருக்கிறது. இதனால் மனுதாரருக்கு டெல்லி காவல்துறையினர் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்'' என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஊரடங்கை மீறிய 2,353 வாகன ஓட்டிகளுக்கு அபராதம்: 115 வாகனங்கள் பறிமுதல்!