காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா கணவருமான ராபர்ட் வதோரா இன்று மூன்றாவது முறையாக அமலாக்கத் துறையினர் முன் ஆஜரானார்.
சஞ்சய் பண்டாரி என்ற ஆயுத விற்பனையாளருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், ராபர் வதோரா மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வதோராவிடம் மூன்றாவது முறையாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இதற்காக மத்திய டெல்லியிலுள்ள ஜாம்நகர் ஹவுஸில் காலை 10.45 மணிக்கு அவர் ஆஜரானார்.
இதற்கு முன்னதாக பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களில் விசாரணைக்காக அமலாக்கத் துறையினர் முன் ராபர்ட் வதோரா ஆஜராகி இருந்தார்.
ஒட்டு மொத்தமாக 11 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் ராபர்ட் வதோராவிற்கும், பண்டாரியின் உறவினர் சுமித் சந்தாவிற்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் தொடர்பான பல கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.