கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி நிமோனியா மற்றும் சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவர் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், மருத்துவர்கள் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் காணொலி ஒன்றைப் பதிவிட்டு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்தக் காணொலியில், ”நான் நிமோனியாவால் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்ந்தேன். 21 நாள்கள் மருத்துவச் சிகிச்சைக்குப் பின் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். கரோனா வேகமாகப் பரவிவந்த சூழலிலும், எனக்கு மருத்துவமனையில் ஜூன் மாதம்தான் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். இந்தச் சமயத்தில்தான் பாதிக்கப்பட்ட நோயிலிருந்தே பூரண குணமடைந்திருந்தேன்.
கரோனா பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்ட என்னுடைய மாதிரிகள் புழுதி மண்டி கிடக்கின்றன. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் உரிய நேரத்தில் ஆய்வகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. இதனால் தவறான முடிவுகள் கிடைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன” என்று பேசியிருந்தார். இவரைப் போன்று பலருக்கும் இந்த மருத்துவமனையில் உரிய நேரத்தில் பரிசோதனை முடிவுகள் அளிக்கப்படுவதில்லை என்று கூறிவருகின்றனர்.