டெல்லி: முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை கைப்பேசியில் எளிதில் பெற 12 ரயில் நிலையங்களுக்கு என கியூஆர் குறியீடுகளை அறிமுகப்படுத்தும் பணியை வடமேற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.
கரோனா தொற்றில் இருந்து தனிமனிதனை பாதுகாக்கும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. நாள்தோறும் ஏற்படும் புதிய பாதிப்புகளால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. இதன்படி வடமேற்கு ரயில்வே நிர்வாகம் புதிய முயற்சியாக முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளை கைப்பேசியில் எளிதில் பெற கியூ-ஆர் கோடு முறையை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக பேருந்து, ரயில் போக்குவரத்து போன்றவற்றில் டிக்கெட் பரிமாறிக் கொள்ளப்படும் போது கூட வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இத்தகைய தொடர்பை தவிர்க்கும் வகையில் கியூ ஆர் குறியீடு அச்சிடப்பட்ட டிக்கெட்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
வால்மார்ட் இந்தியா ஃபிளிப்கார்ட் வசம்: ஜியோ மார்ட்டுடன் போட்டி போட திட்டம்!
இது குறித்து வடமேற்கு ரயில்வே வாரிய உயர் அலுவலர் யாதவ் தெரிவிக்கையில், “கியூ ஆர் குறியீடு அச்சிடப்பட்ட ரயில் பயணச்சீட்டுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். நீங்கள் இணையத்தில் பயணச்சீட்டு வாங்கினால், அதில் கியூ ஆர் குறியீடு இடம்பெற்றிருக்கும். ஒருவேளை நேரடியாக ரயில் நிலையம் சென்று வாங்கினால் கூட அந்த பயணச்சீட்டின் பின்புறம் கியூ ஆர் குறியீடு இருக்கும். பயணிகள் இ-டிக்கெட் வாங்கினால் குறுந்தகவல் மூலம் பயணிகளின் கைப்பேசிக்கு ஒரு இணைப்பு அனுப்பி வைக்கப்படும். அதனை சொடுக்கினால் கியூ ஆர் குறியீடு கிடைத்துவிடும்.
இதைக் கொண்டு பரிசோதகர்கள் பயணிகளின் பயணச்சீட்டுகளை எளிதில் பரிசோதிக்க முடியும். மேலும் ரயில் நிலையங்களுக்குள் நுழையும் போதும் பயணச்சீட்டுகளை பரிசோதனை செய்ய கியூ ஆர் குறியீடு உதவிகரமாக இருக்கும். மேலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தும் ரயில் பயணத்திற்கு ஒரே பயணச்சீட்டு வழங்கும் முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அதாவது, தங்கள் இருப்பிடத்தைச் சென்றடைய ஒன்றுக்கும் மேற்பட்ட ரயில்களில் பயணம் செய்ய நேர்ந்தால் பயணிகள் அதற்கு ஒரேவொரு பயணச்சீட்டு வாங்கினால் போதும். இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு அதிக பயணங்கள் மேற்கொள்ளும் ரயில்கள் மற்றும் சென்றடையும் ரயில் நிலையங்கள் ஆகியவற்றை கண்காணித்து உரிய நேர மாற்றங்கள் செய்யப்படும்.
இந்திய ரயில்வேயின் முதல் சரக்கு விரைவு வண்டி ஹைதராபாத் - டெல்லி இடையே இயக்கம்
அடுத்த மாதம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாக தேடும் வசதி, மாற்று ரயில் வசதிகளை பரிந்துரை செய்தல் போன்றவை அறிமுகம் செய்யப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
ரயில் பயணம் இயல்பு நிலைக்கு திரும்பி பயணிகள் வழக்கம் போல் தங்கள் பயணத்தை தொடங்கும் போது இந்திய ரயில்வேயின் புதிய மாற்றங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.