தெற்கு இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகம் சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க ஓமன் அரசு 'சில்வர் பார்க்' எனும் சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த சுத்திகரிப்பு திட்டத்தை மேற்கொள்ள 3.85 அமெரிக்க டாலா்கள் தேவைப்படும் நிலையில், 1,887 மில்லியன் டாலர்கள் சிங்கப்பூரின் சில்வர் பார்க் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாகவும், மீதமுள்ள 2000 மில்லியன் டாலர்கள் கடன் பெற்று நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த திட்டத்தில் ஓமன் ஈடுபடவில்லை என்று அந்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இந்த அறிவிப்பை இலங்கை முதலீட்டு குழுவும் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே, சிங்கப்பூரின் கணக்கியல் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவிட்டுள்ள சில்வர் பார்க் நிறுவனத்தின் நான்கு இயக்குநர்களில் மூவர் சென்னை முகவரியை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் ஆனந்த், ஸ்ரீநிஷா ஜெகத்ரட்சகன், அனுசுயா ஜெகத்ரட்சகன் ஆகிய மூன்று பேரின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக 'தி இந்து' நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு அமைக்கும் திட்டத்திற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக இலங்கை அலுவலர் ஒருவர் தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், இந்த விவகாரத்தில் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது குறித்து ஜெகத்ரட்சகன் தரப்பில் இதுவரை பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.