கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் கலந்துகொள்வது குறித்து உச்ச நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது என அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றமும் அவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பளித்தது.
ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிடும். ஆனால் அதனை தடுக்க காங்கிரஸ் பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை.
நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில், அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாங்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள், "காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு பாடம் கற்றுகொடுப்பதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்தோம்; பணத்திற்காகவோ அல்லது வேறு எந்த பொருள்களுக்காகவோ இங்கு வரவில்லை. அனைத்து சிக்கல்களும் முடிந்த பிறகே பெங்களூருவுக்கு திரும்பிச் செல்வோம்" என்றனர்.