2019ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த அதிருப்தி காரணமாக நாடெங்கும் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றது. 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கியம், பௌத்தம், சமணம், பாரசீகம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு விரைவாக குடியுரிமை வழங்க வழிவகை செய்வதே குடியுரிமை திருத்தச் சட்டமாகும்.
இஸ்லாமிய மதத்தைச் சேராத அகதிகளுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க இந்தச் சட்டம் வழிவகை செய்தாலும், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து இச்சட்டம் எதுவும் பேசவில்லை. இஸ்லாமிய அகதிகள் குறித்து இச்சட்டம் எதுவும் குறிப்பிடாததால், இது இந்திய அரசியலமைப்புக்கு எதிராக உள்ளதாகவும், இதை நிறைவேற்றியது ஆளும் அரசின் உள்நோக்கம் என்றும் கூறி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துடன் தேசிய குடிமக்கள் பதிவேடு இணையும்போது, நாட்டிலுள்ள இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் இந்திய குடிமக்களுக்கும் தொடர்பில்லை என்று அரசு விளக்கமளித்த பின்னரும் கூட பதற்றம் குறைந்ததாகத் தெரியவில்லை.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதல் நாடெங்கும் இந்தச் சட்டத்துக்கு எதிராக தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. டெல்லி முதல் அஸ்ஸாம் வரை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களின் இறுதி நோக்கம் வேறுவேறானவையாக இருக்கலாம். இருப்பினும், டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
போராட்டங்களுக்கு புதிய இலக்கணம் வகுத்துள்ள ஷாஹீன் பாக் பகுதியில் நடக்கும் இந்தப் போராட்டம் புதுவித சத்தியாகிரகம் என்றே அழைக்கப்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் நடைபெற்றுவந்தது. அதிகப்படியான பெண்கள் பங்கேற்றுள்ள இந்தப் போராட்டம்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஒரு வலுவான போராட்டமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஆம் ஆத்மி தலைவர்கள், மாணவ அமைப்புகள், மேதா பட்கர் போன்ற சமூக ஆர்வலர்களையும் இந்தப் போராட்டம் ஈர்த்துள்ளது.
பெண்கள் இவ்விடத்தைவிட்டு நகர மறுப்பதால், போராட்டத்தைக் கலைக்க டெல்லி காவல் துறையினர் எடுத்த பல்வேறு முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. எதிர்க்கட்சிகள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இந்தப் போராட்டத்தை நடத்துவதாக குற்றஞ்சாட்டிய பாஜக போராட்டகாரர்களுக்கு எதிர்க்கட்சிகள் பணத்தை வாரியிறைப்பதாகவும் கூறுகிறது.
தன்னிச்சையாக இந்தப் போராட்டம் நடைபெறுவதாக இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினாலும், போராட்டகாரர்கள் மத்தியிலுள்ள அசாத்திய ஒருங்கிணைப்பு சில கேள்விகளை எழுப்புகின்றன. இந்தப் போராட்டங்கள் தனிச்சையாக நடத்தப்படுவதா இல்லை திட்டமிட்டு நடத்தப்படுவதா என்பது முதல் அதிகப்படியான பெண்கள் இந்தப் போரட்டத்தில் பங்கேற்றதன் காரணம் வரை பல கேள்விகள் எழுகின்றன. இதில் முதல் கேள்விக்கான பதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பில் உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெண்கள் அதிகமாக பங்கேற்றதன் முதல் காரணம், அவர்கள் அதீத உணர்ச்சிவசப்பட்டதால் இருக்கலாம். பெண்களுடன் சேர்ந்து குழந்தைகள் உள்ளிட்ட பலர் ஒரு மாதத்துக்கு மேலாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதை நாம் காணலாம். போராட்டத்தால் ஒரு நல்ல சமூகத்தை அமைக்கலாம் என்ற உணர்ச்சிப்பூர்வமான செய்தியை இது வெளிப்படுத்துகிறது.
கடந்த காலங்களில் வரலாற்றில் பல முக்கிய போராட்டங்கள் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெண்களுக்கு சம உரிமையை வலியுறுத்தி ‘The Equal Rights Amendment Marches' என்ற போராட்டம் 1970-1980 காலகட்டத்தில் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டது. இதேபோல அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அப்போதுதான் தங்கள் குழந்தைகளால் அமைதியான வாழ்கையை பெற முடியும் என்பதையும் வலியுறுத்தியும் லட்சக்கணக்கான தாய்மார்கள் 2000ஆம் ஆண்டு வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர். இதேபோல இந்தியாவிலும் மணிப்பூர் பெண்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெறும் போராட்டம் பெரும்பாலும் பெண்கள் முன்னெடுப்பதால், காவல் துறையினரால் போராட்டங்களை களைய வலுவான நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
ஷாஹீன் பாக் போராட்டத்தில் பெண்கள் அதிகமாக பங்கேற்றதன் மற்றொரு காரணம், பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பரப்புரைகளாக இருக்கலாம். பாஜகவும் இந்திய இஸ்லாமியர்களும் எதிரெதிர் கருத்துடையவர்கள் என்பதே பொதுமக்களின் கருத்து.
அரசியல் என்பது வெறும் தேர்தல் வெற்றி தோல்வி மட்டுமே என்று சுருங்கியுள்ள இந்தச் சூழ்நிலையில், இஸ்லாமியர்களின் ஆதரவு என்பது பாஜகவுக்கு மிக முக்கியமானதாகிறது. நாடாளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டு முத்தலாக் மசோதாவை அறிமுகப்படுத்தியதும், அதை 2019ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நடைமுறைப்படுத்தியதும், இஸ்லாமிய சமூகத்தில் ஊடுரூவி இஸ்லாமிய பெண்களின் ஆதரவைப் பெற பாஜக முயல்வதையே காட்டுகிறது.
முத்தலாக் சட்டம் மூலம், பாஜக தான் இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவான கட்சி என்று காட்டிக்கொள்வதில் வெற்றியடைந்துள்ளது. ஷாஹீன் பாக் போராட்டத்தில் பெண்களை அதிகமாக பங்கேற்க வைப்பதன் மூலம், முத்தாலக் சட்டத்தில் பாஜகவுக்கு கிடைத்த இஸ்லாமிய பெண்களின் ஆதரவை குலைக்க எதிர்க்கட்சிகளின் திட்டமாகவும் இது இருக்கலாம். ஷாஹீன் பாக் போராட்டத்தைப் போல பிரயாகராஜ் போராட்டத்திலும் அதிகப்படியான இஸ்லாமிய பெண்கள் பங்கேற்றதை காணலாம்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது, ஷாஹீன் பாக் போராட்டம் என்பது தன்னிச்சையான போராட்டம் என்பதைத் தாண்டி திட்டமிட்ட ஒன்றைப் போலவே தெரிகிறது. இது திட்டமிட்ட போராட்டமாக இருந்தாலும் சரி, தன்னிச்சையாக உருவான போராட்டமாக இருந்தாலும் சரி, அதிகப்படியான பெண்கள் பங்கேற்பு என்பது இந்த சமூகத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்கிறது. தங்கள் வாழ்கையை பாதிக்கும் முக்கிய பிரச்னைகளில் பெண்களின் பங்கேற்பு எவ்வளவு முக்கியமானது என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. முக்கியமாக, மத்திய அரசு இச்சட்டத்தை முன்னெடுக்க நினைக்கும்போது, பெண்கள் முன்னெடுத்துள்ள ஷாஹீன் பாக் போராட்டம் சமூகத்தில் பல முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: சோனியா காந்தியுடன் பஞ்சாப் முதலமைச்சர் ஆலோசனை