புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, "இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் வரைவு மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும் தேசிய நிறைவுநிலைத் தேர்வு (NEXT) பொதுவான தேர்வாக நடத்தப்படும் என்றும், அந்தத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் குரல் எழுப்பும். இதுதொடர்பாக பிரதமருக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதப்படும். மேலும், நாளை மறுதினம், புதுச்சேரி சட்டப்பேரவையில் இப்பிரச்னை எழுப்பப்படும்.
கர்நாடகாவில் பணபலம், அதிகார பலத்தை வைத்து பாஜக ஜனநாயகப் படுகொலை நடத்திவருகிறது. கர்நாடகாவைப் போல புதுச்சேரியிலும் பாஜக செயல்பட்டால் எந்தச் சூழ்நிலையிலும் அதனை சமாளிப்போம்" என்றார்.