அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியை ட்விட்டரில் தோற்கடித்து ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் மிகவும் பிரபலமான மத்திய வங்கியாக இந்திய ரிசர்வ் வங்கி உருவெடுத்துள்ளது.
அதுபற்றி கிடைத்த தகவலின்படி, 2009இல் ட்விட்டரில் சேர்ந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கிக்கு 6.67 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். அதே போல், அக்டோபர் 2009இல் ஆரம்பமான ஐரோப்பிய மத்திய வங்கியை 5.91 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ட்விட்டர் பக்கம் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த மார்ச் 20ஆம் தேதி வரை ட்விட்டரில் பின்தொடருபவர்கள் மூன்றரை லட்சத்திலிருந்து 7 லட்சத்து 50 ஆயிரமாக இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர். பின்னர், கரோனா காலத்தில் மளமளவென பின்தொடருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து மில்லியனை தாண்டியுள்ளது.
இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் கூறுகையில், "ரிசர்வ் வங்கியின் ட்விட்டர் கணக்கு இன்று ஒரு மில்லியன் பின் தொடர்பவர்களை எட்டியுள்ளது. ஒரு புதிய மைல்கல். ரிசர்வ் வங்கியில் உள்ள எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, ஆளுநர் தாஸுக்கு 1.35 லட்சம் பின் தொடர்பவர்களுடன் தனி ட்விட்டர் கணக்கும் உள்ளது. இதே போல், RBI SAYS என்ற ட்விட்டர் கணக்கையும் இந்திய ரிசர்வ் வங்கி கையாண்டு வருகிறது. அதன் பெயரில், ஃபேஸ்புக் பக்கங்களும் உள்ளது" என்றார்.