கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியப் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கொள்கைக் குழுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், "ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமுமின்றி நான்கு விழுக்காடாகவே தொடர்ந்து இருக்கும். அதேபோல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 விழுக்காடாகவே இருக்கும்" என்றார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 115 புள்ளிகளாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டுமுதல் ரிசர்வ் வங்கி ஆளுநருக்குப் பதிலாக ரெப்போ வட்டி விகிதத்தை ஆறு பேர் கொண்ட குழுவே நிர்ணயம் செய்துவருகிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையிலான இந்தக் குழுவில் பல பொருளாதார வல்லுநர்களும் இடம்பெறுவார்கள்.
2021 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் வருடாந்திர பணவீக்கம் நான்கு விழுக்காடாக இருக்கும் என்று இந்தக் குழு கணித்துள்ளது. மேலும், பணவீக்கம் அதிகபட்சமாக ஆறு விழுக்காடு வரையும் குறைந்தபட்சம் இரண்டு விழுக்காடாக இருக்கும் என்றும் இந்தக் குழு கணித்துள்ளது.
இதையும் படிங்க: உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு கூடுதல் தளர்வு