பிகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு ஊழல் புகார்கள் எதிர்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டுவருகின்றன. அத்துடன் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் தெரிவித்துவருகிறது.
இந்நிலையில், பிகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் நூதனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிகார் சட்டப்பேரவைக்குள் எலி கூண்டுடன் நுழைந்த ராஷ்டிரிய ஜனதா தள உறுப்பினர்கள், ஆளும் நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி இப்போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினார்.
பிகாரில் ஊழல் புரையோடிப்போய், மாநில வளர்ச்சி முற்றிலுமாக முடங்கியுள்ளது எனவும், அந்த ஊழல் பெருச்சாளிகளை கூண்டுக்குள் அடைக்கும் வரை ராஷ்டிரிய ஜனதாதளம் ஓயாது என ராப்ரி தேவி தெரிவித்துள்ளார். இதை உணர்த்தும் நோக்கிலேயே கட்சி இத்தகைய போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யெஸ் வங்கி பிரச்சனைக்கு 30 நாள்களில் தீர்வு - சக்திகாந்த தாஸ்