ஆந்திரா மாநிலம் குண்டூரில், நரகோடூர் கிராமத்தில் மிகவும் அரிய வகை மரமான ’ஸ்ரீதலா மரம்’ இருப்பதை தாவரவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மரம் இருக்கும் தகவலே அப்பகுதி மக்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களால் தான் தெரிய வந்துள்ளது.
தாவரவியலாளர்களின் கூற்றுப்படி, இந்த மரம் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். பின்னர் அங்கேயே இறந்து விடுகிறது. ஸ்ரீதலா மரங்கள் பெரும்பாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, இலங்கையின் சில பகுதிகளிலும் மட்டுமே காணப்பட்டு வந்த நிலையில், தற்போது முழுவதுமாக அழிந்துவிட்டன.
இந்த மரத்தின் இலைகளை முன்னோர்கள் கையெழுத்துப் பிரதிகளை எழுதுவதற்கும், குடிசைகளுக்கு கூரைகள் அமைப்பதற்கும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஸ்ரீதலா மரம் இங்கு இருப்பது எங்களுக்குத் தெரியாது. பேராசிரியர்கள் உறுதிபடுத்திய பின்னர்தான் நாங்கள் மரம் குறித்து அறிந்தோம். இந்த மரம் 60 ஆண்டுகள் பழமையானது" என்றனர். இந்த மரம் பூக்கத் தொடங்கும்போது வறட்சி ஏற்படும் எனவும் உள்ளூர் வாசிகள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க : அனைத்து மக்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்த முதலமைச்சர் முடிவு!