கூகுல் மற்றும் ஆப்பில் இணையதளத்தில் இருந்து ரேபிடோ செயலியை நீக்க பரிந்துரைத்த சென்னை காவல்துறை ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ரேபிடோ சேவை தொடர்ந்து செயல்படுவதில் எந்த தடையும் இல்லை.
மோட்டார் வாகனச் சட்டப்படி சொந்த வாகனத்தை வணிக ரீதியில் பயன்படுத்தக்கூடாது. இருசக்கர வாகனத்தை வாடகை சேவைக்கு பயன்படுத்த விதிமுறை இயற்றப்படாததால், கூகுள் மற்றும் ஆப்பிள் இணையதள சேவையில் இருந்து நீக்குமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பரிந்துரை செய்தார்.
காவல்துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், இருசக்கர வாகன பின் இருக்கையை வாடகைக்கு பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு விதிகளை உருவாக்கும் வரை, ரேபிடோ வை அனுமதிக்க முடியாது எனக்கூறி தடையை நீக்க முடியாது என உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரேபிடோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருசக்கர வாகனத்தை வணிகரீதியில் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் எந்த விதிமுறையும் இல்லை.
பல்வேறு நிறுவனங்கள் வணிக ரீதியில் செயல்படும் போது தங்கள் நிறுவனம் மட்டும் செயல்பட தன்னிச்சையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் செயல்பட உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கூகுல் மற்றும் ஆப்பில் இணையதளத்தில் இருந்து ரேபிடோ செயலி நீக்க காரணமாக இருந்த சென்னை காவல்துறை ஆணையரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
ராஜஸ்தான், சண்டிகார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரேபிடோ நிறுவனம் தொடர்ந்து செயல்படலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஏன் செயலியை நீக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார் என, தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.