மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பிகாரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்து பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நீதித்துறைக்கு கடிதம் எழுத உள்ளார். பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கண்டிக்கத்தக்கவை. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை நீதித்துறை விரைந்து தண்டிக்க வேண்டும், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகளில் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வலியுறுத்தி அனைத்து முதலமைச்சர்களுக்கும் நான் கடிதம் எழுத உள்ளேன். விரைவு நீதிமன்றங்களில் (Fast Track Courts) நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ தொடர்பான அனைத்து வழக்குகளையும் விரைவாக தீர்ப்பதற்கு அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதுவேன்.
இதுபோன்ற வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கான ஒரு வழிமுறை இருப்பதை உறுதி செய்யுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் கேட்டுக்கொண்டேன். தற்போது நாடு முழுவதும் 704 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களின் எண்ணிக்கை 1,023 ஆக விரைவில் அதிகரிக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்த ரவிசங்கர், ராகுல் காந்தியின் பேச்சுகள் சில எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பெரிய கட்சியின் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி இதனை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு குற்றங்களே நடைபெறவில்லையா? இதுகுறித்து ராகுல் காந்தி உத்ரவாதம் அளிக்க முடியுமா?” எனவும் ரவிசங்கர் பதில் கேள்வி எழுப்பினார். “சர்வதேச சமூகம் இந்தியாவை கேலி செய்கிறது. இந்தியா பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மையப்புள்ளியாக மாறிவிட்டது” என ராகுல் காந்தி கூறியிருந்தார்.