அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு ஜூன் 10ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டப்படும் என கோயில் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் மஹந்த் கமல் நயன் தாஸ் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் அமைந்துள்ள கியூபர் திலா சிவன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டு பின்னர், கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மஹந்த் கூறுகையில், "இலங்கையில் ராவணனுக்கு எதிபராக போர் தொடுப்பதற்கு முன்பு "ருத்ராபிஷேக்" என்ற வழிபாடை ராமர் மேற்கொண்டார். இந்த வழிபாடே தற்போது மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த வழிபாடு இரண்டு மணி நேரத்திற்கு மேற்கொள்ளப்படும். பின்னர், அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும்" என்றார்.
கோயில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் வகையில், ராம் லல்லா சிலை மார்ச் மாதம் புதிய இடத்திற்கு எடுத்தச் செல்லப்பட்டது. சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்த 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு கர சேவர்களால் (ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள்) இடிக்கப்பட்டது. அங்கு ராமர் கோயில் இருந்ததாகவும் அதனை, இடித்து விட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் கர சேவர்கள் கருதினர்.
பல காலமாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மசூதி அமைத்துக் கொள்வதற்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறப்பு!