இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி ரஷ்யாவிடம் சரணடைந்த நாளான மே 9ஆம் தேதி ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஜெர்மனி சரணடைந்து இந்தாண்டோடு 75 ஆண்டுகள் நிறைவடையும் சூழலில், அதனை விமரிசையாகக் கொண்டாட ரஷ்யா திட்டமிட்டிருந்தது.
ஆனால், கரோனா தொற்று காரணமாகக் கடந்த மாதம் 9ஆம் தேதி போர் வெற்றி தினம் மிகவும் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. இருப்பினும், விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு விழா வரும் ஜூன் 24ஆம் தேதி மாஸ்கோவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் இந்திய-சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் பதற்றமான சூழல் நிலவிவந்தாலும், பல தசாப்தங்களாக இந்தியா ரஷ்யா இடையே நல்லுறவு இருப்பதன் காரணமாக ராஜ்நாத் சிங் இதில் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.
இந்தப் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில் சீனா உள்பட 11 நாடுகளைச் சேர்ந்த முப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் 75 பேர் பங்கேற்கவுள்ளனர்.