கரோனா பொது முடக்கத்தின் மத்தியில், ராஜஸ்தான் மாநிலத்தின் தேசிய பெண்கள் ஆணையத்திற்கு சுமார் 800 புகார்கள் வரை வந்துள்ளன. இதில் 40 சதவிகிதம் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் ஆகும். இதுகுறித்து அம்மாநில சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், “பெண்களுக்கு எதிரான பல்வேறு புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளன. மாநில மகளிர் ஆணையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் ராஜஸ்தானில் உள்ள பெண்களுக்கான மாநில ஆணையம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சரிவர செயல்படுவதில்லை. பெண்களுக்கு ஆதரவு தேவைப்படும் இந்த கடினமான காலங்களிலும்கூட மகளிர் ஆணையம் செயல்படவில்லை. இதனால் ஏராளமான பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்” என்றார்.
இது குறித்து சமூக சேவகர் நிஷா சித்து கூறும்போது, “ராஜஸ்தானின் பெண்கள் ஆணையத்தில் ஏராளமான பதவிகள் காலியாக உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கமிஷனை வலுப்படுத்தவோ, புனரமைக்கவோ இந்த அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்றார்.
மேலும், “ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் ராஜஸ்தான் காவல் துறையின் தரவுகளைப் பார்த்தால், மார்ச் 2020ஆம் ஆண்டில் பெண்கள் துன்புறுத்தல் (498-ஏ) இன் கீழ் 1047 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, வரதட்சணை வழக்குகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 2,674 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து இது குறித்து பேசிய முன்னாள் மகளிர் ஆணைய தலைவி சுமன் சர்மா, “ஏப்ரல் மாதத்தில் நாடு தழுவிய பொது முடக்கம் காரணமாக இந்த குற்றங்கள் மெல்ல சரிந்து வந்தன. எனினும், அதே மாதத்தில் பெண்களுக்கு எதிரான 879 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் காவல் துறையின் 2019ஆம் ஆண்டு அறிக்கையின்படி, முந்தைய ஆண்டு (2018) உடன் ஒப்பிடும்போது 2019 ஜனவரி முதல் ஜூலை வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 66 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
எனவே, இந்த அரசாங்கம் மகளிர் ஆணையத்துக்கு தலைவரை நியமிக்க வேண்டும். இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு நேரம் எடுக்கும் என்ற உண்மையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனாலும், ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. மகளிர் ஆணையம் பெண்களுக்குத் தேவை. அதனை உணர அசோக் கெலாட் தவறிவிட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது. ஆகவே, மாநில அரசாங்கம் விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:'மத்திய அரசு ஏழை மக்களிடம் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறது'