இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனிடையே மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு நடவடிக்கையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளன. இந்நிலையில் வெளிமாநிலங்களிலிருந்து அனுமதியின்றி யாரும் மாநிலத்திற்கு வரமுடியாதபடி மாநில எல்லையை மூடுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
நேற்று இரவு கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதையடுத்து முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது தான் அரசின் முக்கிய நோக்கம். அதனால் அனுமதியின்றி வெளிமாநிலங்களிலிருந்து மக்கள் வருவதைத் தடுக்க ராஜஸ்தான் மாநில எல்லைகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளோம்.
குடும்பத்தினரின் உயிரிழப்பு அல்லது மருத்துவ அவசரம் உள்ளிட்ட காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாநிலத்திலிருந்து வெளியே பயணப்பதிற்கும், மாநிலத்திற்குள் வருவதற்கும் மாவட்ட ஆட்சியர் மட்டுமே அனுமதியளிக்க முடியும்.
ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்றே மற்ற மாநிலங்கள் அனுமதியளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரைத் தவிர்த்து வேறு யாரும் மாநிலத்திற்குள் வர அனுமதியளித்தால், அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: நிலைமையை கண்காணித்து வருகிறோம் - பிரதமர் மோடி