ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த டிசம்பர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சச்சின் பைலட்டிற்கு முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்டதால், அவர் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்துவந்தார்.
பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களான 30 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், சில சுயேச்சைகளின் ஆதரவைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். இதன் காரணமாக, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி நெருக்கடியைச் சந்தித்துவரும் வேளையில், பாஜக மாநில அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வி.சதீஷ், பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா, எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து தலைவர்கள் விவாதித்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், முதலமைச்சர் அசோக் கெஹ்லோட், காங்கிரஸ் மற்றும் பிற 109 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறியுள்ளார். 200 உறுப்பினர்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில், காங்கிரஸ் 107 எம்.எல்.ஏக்களும், பாஜக 72 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.