சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்டங்கள் விவசாயிகளின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக, பஞ்சாப்பில் விவசாயிகளின் போராட்டம் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். இச்சூழலில் பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மாநிலத்தில் நுழைவதைத் தடுக்கும்வகையில் மாநில எல்லைகளுக்குச் சீல் வைக்கப்படும் என்று ஹரியானா பாஜக அரசு அறிவித்தது.
தடுப்புகளை மீறி நுழைய முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டு, கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. மேலும், போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினரின் இந்தச் செயலுக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "அநீதிக்கு எதிராக போராடுவது குற்றம் அல்ல, கடமை. மோடி அரசின் இந்த எஃப்.ஐ.ஆர்-கள் விவசாயிகளின் வலுவான நோக்கங்களைத் தடுக்காது. விவசாயிகளின் உரிமையை பறிக்கும் இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும். நாங்கள் எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருப்போம்" என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "பாஜக அரசில் தற்போது நாட்டின் நிலையைப் பாருங்கள். பாஜகவின் கோடீஸ்வர கார்ப்பரேட் நண்பர்கள் டெல்லிக்கு வரும்போது அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஆனால் விவசாயிகள் டெல்லிக்கு வரும்போது அவர்களுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. விவசாயிகளுக்கு எதிராக ஒரு சட்டத்தை டெல்லியில் உருவாக்கினால் அது நல்லது, ஆனால் விவசாயிகள் தங்கள் நிலையை விளக்க டெல்லிக்கு வரும்போது அது தவறா" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பற்றி எரியும் விவசாயிகளின் போராட்டம் - வேளாண் சட்டம் குறித்து வாய் திறந்த மோடி!