போக்குவரத்துக் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட கார்களின் ஓட்டுநர்களுள் ஒருவரான கிஷன் சோன்கர் கூறுகையில், “வாகனங்களைப் பறிமுதல்செய்யும் முன்னர் செய்ய வேண்டிய நெறிமுறை எது ஒன்றையும் காவல் துறையினர் பின்பற்றவில்லை. நேற்று இரவு 8 மணியளவில் துர்க் மாவட்டத்தை அடுத்துள்ள பிலாயிலிருந்துதான் எங்களின் கார்கள் உயர் அலுவலர்களால் வரவழைக்கப்பட்டன. மாநிலத்திற்கு வெளியில் இருந்துவந்த வருமானவரி அலுவலர்களின் பயன்பாட்டிற்காக எங்களை அழைப்பதாக எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ராய்ப்பூருக்கு வந்ததும் எங்கள் கார்களை வருமான வரி அலுவலக வளாகத்தில் நிறுத்தச் சொல்லி இருந்தனர். அதன்படிதான் எங்கள் கார்களை அங்கு நிறுத்தியிருந்தோம். பின்னர், இரவு 11:30 மணியளவில், வருமான வரி அலுவலர் ஒருவர் வந்து எங்கள் கார்களை ராஜ் டாக்கீஸுக்கு எடுத்துச் செல்லும்படி உத்தரவிட்டார். அவரின் உத்தரவினை நாங்கள் பின்பற்றினோம்.
இந்நிலையில், அதிகாலை 12.30 மணியளவில் காவல் துறையினர் வந்து எங்கள் வாகனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கேட்டனர். அதனைத் தந்தோம். அவற்றை சரிபார்த்து, 17 கார்களை ராய்ப்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர்கள் வருமானவரித் துறை அலுவலர்களிடம் பேசிய பின்னரே சாவியைக் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.
ராய்ப்பூர் காவல் நிலையத்தின் வளாகத்தில் வாகனங்கள் இன்னும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் கார் ஓட்டுநர்கள் அனைவரும் அந்த இடத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூர் முழுவதும் வருமானவரி சோதனைகளை மேற்கொள்வதற்காக டெல்லியிலிருந்து ராய்ப்பூருக்கு வந்திருந்த வருமானவரித் துறை அலுவலர்கள் குழுவை அழைத்துச் செல்வதற்காக இரவு 8 மணிக்கு பிலாய் பகுதியிலிருந்து இந்தக் கார்கள் வரவழைக்கப்பட்டதாக வருமானவரித் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : மீண்டும் திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசிய பாஜக!