கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை நாடு முழுவதும் இந்த வைரஸால் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 549ஆக அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கை சில தளர்வுகளுடன் நான்காவது முறையாக நீட்டிப்பது குறித்த அறிவிப்பை மே 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்திய மத்திய அரசு, பயணிகள் ரயில் சேவையை மே 12ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி வழங்கியது. நாடு தழுவிய பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை சுமார் 50 நாள்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. ரயில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இருந்தபோதிலும் ரயில் சேவையை தொடங்கியதற்கு பல்வேறு மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தீவிரம் அடைந்து வருவதால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் பொறுப்பை ரயில்வே அமைச்சகமே ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதிவரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக மீண்டும் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜூன் 30ஆம் தேதிவரை நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 30 வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதற்காக முன்பதிவு செய்தோருக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும். அனைத்து சிறப்பு ரயில்கள், ஷிராமிக் சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதையும் பார்க்க: 'மீதமுள்ள 16.4 லட்சம் கோடி எங்கே?' - ப.சி. கேள்வி! சிதம்பர ரகசியத்தை இன்று உடைக்குமா அரசு?