குடியுரிமை திருத்தச் சட்டம், டெல்லி கலவரம் தொடர்பாக கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டதாகக் கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏழு பேரை மக்களவை சபாநாயகர் நேற்று இடைநீக்கம் செய்தார்.
இந்நிலையில், எம்பிக்கள் இடைநீக்கத்தை கண்டித்தும், டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியினர், ”டெல்லி கலவரத்திற்கு நீதி வேண்டும், நீதி வேண்டும்” என மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் காங்கிரஸ் எம்பிக்களின் இடைநீக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு மத்திய அரசும், டெல்லி மாநில அரசுமே காரணம் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: டெல்லி கலவரம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு கிடைத்த பரிசுதான் இடைநீக்கம் - மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு