பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. அந்நிகழ்வில், 'கிலோன் பெ சர்ச்சா' பொம்மைகள் பற்றி விரிவாக உரையாற்றினார்.
அதாவது, உலகளாவிய பொம்மைத் தொழிலுக்கு ரூ. 7 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தக மதிப்பு இருக்கிறது. இந்தத் துறையில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, நமது நாட்டின் உற்பத்தித் துறையில் பொம்மை குறித்த கருத்தை நாம் மையப்படுத்த வேண்டும் என அதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளைக் குறித்து 'பரிக்ஷா பெ சார்ச்சா' (தேர்வுகள் பற்றிய) விவாதம் நடத்துவதற்கு பதிலாக 'கிலோன் பெ சார்ச்சா' (பொம்மைகள் பற்றிய) விவாதம் செய்துள்ளார். மாணவர்களின் எதிர்காலம் ஊசலாட்டத்தில் இருக்கையில் பிரதமரோ பொம்மைகள் குறித்து பேசுகிறார்.
தினசரி புள்ளி விவரங்களின்படி உலக கோவிட்-19 பாதிப்பை இந்தியா விரைவில் முறியடிக்க உள்ளதாகவே அறியமுடிகிறது. நோய் தடுப்பு அல்லது பாதுகாப்பு நெறிமுறைகள் இல்லாமல் இன்னும் ஜேஇஇ-நீட் நடத்துவது சரியானதாக தெரியவில்லை. ஆனால் இது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரதமரிடம் உரிய பதில் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.