பணி இடங்களில் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்தி, உரிய சம்பளத்தை முழுமையாக வழங்கக் கோரி ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார செயற்பாட்டாளர்), அங்கன்வாடி, மத்திய உணவுத்திட்டப் பணியாளர்கள், சிக்ஷா தேசிய சுகாதார மிஷன் ஆகியவற்றின் கீழ் உள்ள ஒருங்கிணைந்துள்ள தொழிலாளர்கள் நேற்று (ஆகஸ்ட் 7) முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய தொழிலாளர் சங்கங்களுடன் ஐ.என்டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.யூ.டி.யூ.சி, ட.யூ.சி.சி, எஸ்..இ.டபிள்யூ.ஏ., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எல்.பி.எஃப்., யூ.டி.யூ.சி., ஆகிய தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு அறிக்கையின் மூலம் அறியமுடிகிறது.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "இந்தியா தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறது. இதில் நாடு முழுவதும் முன்னணி வீரர்களாக சுகாதாரப் பணியாளர்கள் களம் கண்டுக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் சமூகத்தினரும் சிறந்த பணி நிலைமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்து தரக் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து அவர்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதால் தங்கள் சொந்த உரிமைகளுக்காக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மௌனமே முழு முதற்காரணம். போராட்டங்களின் நியாத்தை பார்க்காமல், கோரிக்கையை செவிமடுக்காமல் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தரப்பினர் கூறுகையில், "கோவிட்-19 தொற்றுநோயிக்கு எதிரான தடுப்புப் பணிகளில் முன்னணியினராக பணியாற்றி வந்த திட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக மாத ஊதியத்தை கூட அரசு முறையாகவும், முழுமையாகவும் வழங்கவில்லை. ஆடம்பரத்திற்கு செலவு செய்யும் இந்த அரசுகள் எங்களுக்கும் குடும்பம் உண்டு என்பதை மறந்துவிட்டன. எங்களின் குறைந்தபட்ச தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முன்வரவில்லை.
பணியிட பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு, இடர் கொடுப்பனவு, பணியில் உயிரிழந்தப் பணியாளர்களின் குடும்பங்களுக்கான உதவி என இந்த அரசால் எதுவுமே வழங்கப்படுவதில்லை. இந்த காலகட்டத்தில் பல தொழிலாளர்கள் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அவர்களுக்கெல்லாம் இந்த அரசு என்ன செய்தது ? எங்களுக்கு உரிய நீதியை வேண்டி, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபடுகிறோம்" என கூறினர்.