இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவமும் மோதிக்கொண்டதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதுகுறித்து ஆலோசனை நடத்தும் வகையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் சீனா, நேபாளம் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள பூசல், கரோனா பேரிடர், பொருளாதாரப் பாதிப்பு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டத்தைக் கூட்டி ராகுல் காந்தியைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதுகுறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை என பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் எத்தனை முறை ஊடுருவியுள்ளது, கல்வான் மோதலுக்குப் பிறகும், இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை எனப் பிரதமர் மோடி கூறியதற்குக் காரணம் என்ன, இந்த விவகாரத்தில், பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சரின் கருத்துகள் ஏன் மாறுபடுகிறது, போன்ற பல கேள்விகள் கூட்டத்தில் எழுப்பப்பட்டன. இதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 465 பேர் உயிரிழப்பு!